up

Advertisment

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மானவ் மங்கள் மிலன் சத் பவனா சமகம் என்ற ஆன்மிக அமைப்பினால், ஹத்ராஸ் மாவட்டத்திலுள்ள புல்ராய் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சியில், போலே பாபா என்ற சாமியார் கலந்துகொண்டு ஆன்மிக சொற்பொழிவாற்றினார். அவரது சொற்பொழிவைக் கேட்க புல்ராய் கிராமத்தில் மட்டுமல்லாது, சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கூடினார்கள். இவர்களில் பெண்கள், குழந்தைகள் எண்ணிக்கை தான் அதிகம்.

நீண்ட நேரம் அவரது சொற்பொழிவைக் கேட்டுவிட்டு, நிகழ்ச்சி முடியவும் அனைவரும் அவசர அவசரமாக வெளியேறினார்கள். வெளியே செல்லக்கூடிய பாதை, கார், பைக்குகள் என வாகனங்கள் நிரம்பி குறுகலானதாக இருந்ததால், அடித்துப்பிடித்து வெளியேறியபோது, ஒருவரோடொருவர் முட்டி மோதி கீழே விழ, அப்படி கீழே விழுந்தவர்களையும் பொருட்படுத்தாமல் ஏறி மிதித்துச் சென்றிருக்கிறார்கள். சிறுவர், சிறுமியர், பெண்கள் தான் அதிக அளவில் இந்த நெரிசலில் சிக்கினர். அலறல் சத்தத்துடன் மூச்சுவிடக்கூட முடியாமல் திணறியவர்கள், மயங்கிச்சரிய, அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், அங்கிருந்த லாரி, டிராக்டர், டெம்போ வேன்களில் அவர்களை ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு கொண்டுசென்று சேர்த்துள்ளனர். திடீரென சாரைசாரையாக மக்களைக் கொண்டுவந்து சேர்த்ததில், சுகாதார மையத்திலும் சிகிச்சையளிப்பதில் சிக்கலானது. சேர்க்கப்பட்டவர்களில் பலரும் ஏற்கெனவே உயிரிழந்திருக்க, அவர்களை சுகாதார மையத்துக்கு வெளியிலேயே பொதுவெளியில் கிடத்தினார்கள். மற்றவர்களை அருகிலுள்ள மாவட்டங்களிலுள்ள சுகாதார மையங்களுக்கு அனுப்பிவைத்தனர். இதனாலேயே மேலும் பலர் உயிரிழக்க, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் உயிருக்குப் போராடியபடி இருக்கிறார்கள்.

நாராயண் ஹரி என்ற இயற்பெயரில் போலீஸ்காரரகாப் பணியாற்றியவர் தான் பின்னாளில் ஆன்மிகத்தின் பக்கம் திரும்பி, போலே பாபா என்ற பெயரில் சொற்பொழிவாற்றத் தொடங்கியிருக்கிறார். இவரது கூட்டத்துக்கான மைதானத்தில் வசதிகள் சரியாக செய்யப்படாததும், பாதுகாப்புக்கு போலீசார் அதிக அளவில் இல்லாததுமே இவ்வளவு உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது. போலே பாபாவிடம் ஆசி வாங்கவும், அவரது காலடி மண்ணை எடுத்துப் பூசவும் மக்கள் முயன்றதால் இந்த துயரச்சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. உயிர்ப்பலி குறித்த செய்தியறிந்ததுமே போலே பாபா தலைமறைவாகிவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உத்தரபிரதேச அரசு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குடியரசு தலைவரும், பிரதமரும், எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தியும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.